ADDED : மே 26, 2010 01:35 AM
மணலி புதுநகர் : அரிசி வாங்க வைத்திருந்த பணத்தில் போதை ஏற்றிக்கொண்டதால், கண்டித்த தாயை மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மணலி புதுநகரை அடுத்த பழைய நாப்பாளையம், லட்சுமி நகரைச் சேர்ந்தவர் பூங்காவனம். இவரது மனைவி கமலா(60). மகன் சீனிவாசன்(32). இவர் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் சரியாக வேலைக்கு செல்லாமல், வீட்டில் வைக்கும் பணத்தை திருடி அதன் மூலம் குடித்து வந்தார்.
நேற்றும் அரிசி வாங்க வைத்திருந்த பணத்தை எடுத்துச் சென்று, வீட்டருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்தார். மீண்டும் வீட்டிற்கு வந்த போது, அவரது தாய் கமலா, மகனை கண்டித்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சீனிவாசன், அங்கிருந்த மரக்கட்டையால் தாயின் தலையில் அடித் தார். பலத்த காயமடைந்த கமலா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சீனிவாசனை பிடித்து மணலி புதுநகர் போலீசில் ஒப்படைத்தனர். தாயை கொலை செய்த மகனை, இன்ஸ்பெக்டர் கணேசன் கைது செய்தார்.